Tuesday, August 19, 2008

D. 2nd August' 2008

கோபுரப்பட்டி கோவில் முன்னேற்றங்கள்
(02.08.2008)


கோவிலுள்ள கல்வெட்டுக்கள் முழுவதும் கடந்த மாதம் நிபுணர்களால் ஆராயப்பட்டு கல்வெட்டுச் செய்திகள் அனைத்தும் ஆராயப்பட்டு படியெடுக்கப்பட்டது. கோவில் எப்போது நிர்மாணம் செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. கி.பி. 1342ல் ஹொய்சாள மன்னான மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் ஒரு முறையும் கி.பி.1498ல் இலங்கை உலகன் என்று அறியப்பட்ட தோழப்பன் என்பவரால் ஒரு முறையும் திருப்பணி நடந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

கி.பி. 1323ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்திற்கு முகமதியர் படையெடுப்பினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வைணவர்களின் ஒரு குழுவினர் பிள்ளைலோகாச்சாரியார் தலைமையில் நம்பெருமாளை எழுந்தருளப்பண்ணிக் கொண்டு தெற்கு நோக்கி புறப்பட்டனர்.

சுமார் பன்னீராயிரம் வைணவர்கள் வாழ்வோ சாவோ திருவரங்கத்தில்தான் எனயிருந்தனர். இவர்கள் அனைவருமே இந்த தீவிரவாத முகமதியர்களால் அச்சமயம் கொல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியை “பன்னீராயிரம் முடித்திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்“ எனக் கோயிலொழுகு குறிப்பிடுகின்றது. மேற்கூறிய இரு பிரிவிலும் சேராத சில வைணவர்கள் இந்த கோபுரப்பட்டியினைச் சுற்றி குடியேறி, இந்த திருக்கோவிலை நிர்மாணித்துள்ளனர். தாங்கள் அரங்கன் வழிபாட்டினை இக்கோவிலில் தொடர்ந்துள்ளனர்.

அக்காலத்தில் இங்கு குடியேறிய வைணவர்கள் அனைவரும் ஆடி அமாவாசையன்று திருவரங்கத்தில் கொல்லப்பட்ட பன்னீராயிரம் வைணவர்களுக்கும் சோ்த்து திதிகள் கொடுத்திருக்கின்றனர்.

இந்த கோவிலுள்ள ஒரு கல்வெட்டு இதனை “புதுக்கிடை“ என்று குறிப்பிடுகின்றது. இதனால் பழைய கிடக்கை ஸ்ரீரங்கம் என்று அறிந்து கொள்ளலாம். இக்கோவில் ஸ்ரீரங்கம் போன்று இங்கும் பெருவள வாய்க்கால் மற்றும் கம்பலாறு என்று இரு வாய்க்கால்கள் நடுவே எழிலுற அமைந்துள்ளது.

இந்த திருக்கோவிலின் சிறப்பை அகஸ்திய விஜயம் என்னும் இதழில் இதன் ஆசிரியர் சித்தர் ஸ்ரீகுருமங்கள கந்தர்வா வெங்கட்ராமன் அவர்கள், ” இக்கோவிலில் அனைத்து விவசாயிகளும் விதை, நெல், தான்ய வித்துக்கள் மற்றும் முதலில் விளைந்த பொருளுடன் வழிபட வேண்டிய தலம். உறவினர்களால், பெற்ற பிள்ளைகளால், பெண்களால், கூடயிருந்து பழகியவர்களின் துரோகச் செயல்களால் அவச்சொல், வீண்பழி, சொல்லொணா அவமானத்திற்கு ஆளானோர் சனிக்கிழமைதோறும் விரதமிருந்து இக்கோயிலில் வழிப்பட்டால் குடும்ப கௌரவமும், தன்மானமும் மீண்டிட உதவும். மானுடர்களுக்கு மட்டுமின்றி பசு, காளை, ஆடு போன்ற ஜீவராசிகளின் நோய் போக்கும் தலம். தொழில் வியாபாரம் சிறக்கவும், நல்ல குழந்தைகள் பிறக்கவும், நோயின்றி வாழவும், கல்வியில் சிறக்கவும், திருமணத் தடைகள் நீங்கவும் இத்திருத்தலத்து எம்பெருமானை வழிபடின் போதும்” என்றருளுகின்றார்.

ஏறத்தாழ 666 வருடங்கள் பழமைவாய்ந்த இப்பெருங்கோயில் 508 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது என்பது சிறப்பாகும். இந்த பெருமை யாவும் இந்த வலைத்தளத்திற்கும் வலைத்தள வாசகர்களாகிய உங்களையுமேச் சாரும். இதனை வெளியுலகிற்கு உலகம் முழுதிற்கும் படம் பிடித்துக் காட்டியது நமது வலைத்தளம் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். நமது வலைத்தளத்தின் உறுப்பினராகிய திரு எஸ்.ராஜகோபாலன் அவர்கள் முயற்சியினால் சக்தி விகடனில் இதன் விவரத்தினை வெளியிடச் செய்தார். அதன் பின்பு திருப்பணி கமிட்டி நிர்மாணிக்கப்பட்டு அரங்கனின் அற்புத கிருபையினால் திருப்பணி வேலைகள் செவ்வனே நடந்து வருகின்றது.

இந்த அரிய பெரிய சாதனையில் வாசகர்களாகிய உங்கள் பங்கும் இதில் சேர தாங்களனைவரையும் அன்போடு அழைக்கின்றேன். தாங்கள் நன்கொடைகளை DD அல்லது செக் மூலமாக

ஸ்ரீரங்கம் இந்தியன் பேங்க் SB Account No. 768332386 ல் நாட்டின் எந்தவொரு இந்தியன் வங்கி மூலமாகவும்

ஆதிநாயகப் பெருமாள் கைங்கர்ய சபா

என்னும் பெயரில் செலுத்தலாம்.

(நன்கொடைக்குரிய அச்சிடப்பட்ட வரவு ஓலையினை (Receipt)
பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்)

No comments: