Tuesday, September 14, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! (வளர்ச்சி.01 - 13.10.2010)

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!
(10.09.2010)







என் அருமை வாசகர்களுக்கு..!

அடியேனின் பணிவான வணக்கங்கள்..!

கோபுரப்பட்டி..! எங்களை கட்டிப்போட்டு, எங்களையும் ஒரு பொருட்டாக்கி, பிரமிப்பு உண்டாக்கிய ஒரு அற்புதமான தலம்.

என் நண்பர்கள் பலரிடத்து, கோபுரப்பட்டிக் கோவிலில் எனக்குக் கிடைத்த அனுபவங்களைக் கூற, அவர்களைனைவரும் “இதனை எழுத்தாக்கிப் பலரும் பயனுடையும் வண்ணம் செய்யுங்களேன்..!“ எனக்கூறினர்.

அந்த ஆதிநாயகருடன் எங்களுக்கு ஏற்பட்ட அற்புத நிகழ்வுகளையும்,

அனுபவஙகளையும் உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

ஆதிநாயகன் எனக்கும் உங்களுக்கும் அருள் பாலிக்கட்டும்.

என்றென்றும் அன்புடன்

-முரளீ பட்டர்-

10.09.2010



கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!

வளர்ச்சி-01 13.09.2010









இன்று நினைத்தாலும் நினைவினை விட்டு அகலாதது கோபுரப்பட்டியின் அனுபவங்கள். அதனால்தான் எந்தவித குறிப்பும் இன்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள சாத்தியமாகின்றது.



அன்று அதாவது ஆகஸ்டு 2006 என்று நினைவு...! என் இனிய நண்பர்களான திரு. அரவிந்தனும்(இவர் பெரியநம்பி ஸ்வாமிகளின் பேரன்..!), திரு. கண்ணனும் (இவர் அரங்கனது கைங்கர்யத்தில் அளவற்ற ஈடுபாடுடையவர்..) இருவருமே சில புகைப்படங்களுடன் அடியேனிடத்துத் தொடர்பு கொண்டனர். அவர்கள் அலைந்து திரிந்து மிகவே கஷ்டப்பட்டு அதனை சேகரித்து வைத்திருந்தனர்.



அவைகள்...

(1) ஸ்ரீரங்கத்திலுள்ள மணவாள மாமுனிகளின் சிதிலமடைந்த திருவரசு



(2) மண்ணச்சநல்லுார் (திருச்சி மாவட்டம்) என்ற ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ள கோபுரப்பட்டி என்ற கிராமத்தில் சில அன்னியசக்திகளால் மிகவே பாழ்படுத்தப்பட்டுள்ள ஒரு ஸ்ரீரங்கநாதனது கோவில்.



(3) தஞ்சை மாமணிக்கோவில் என்றழைக்கப்படும் தற்போதுள்ள கோவிலுக்கு அருகேயுள்ள வைணவத்வேஷிகளால் அழிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கோவில் (இதுவே தஞ்சைமாமணிக் கோவிலாக இருந்தது என்பார்கள் சிலர்).



இதில் என்னை மிகவும் பாதித்தது கோபுரப்பட்டிக் கோவிலும், ஸ்வாமி மணவாள மாமுனிகளின் திருவரசு இருந்த நிலையும்தான்.



அப்போது “ஸ்ரீரங்கபங்கஜம்“ (இந்த வலைத்தளம்) மிகவும் பிரசித்திப்பெற்ற ஒரு மீடியாவாக விளங்கிக்கொண்டிருந்த ஒரு காலம். (அதன் பிறகு பல சோதனைகளையும், பல மனவேதனைகளையும், ஆணவம் கொண்டு பலர் கொடுத்தபின்னும், இன்னமும் அவனருளால் தொடர்கின்றது. என்னால் அப்போது பணியாற்றிய திருப்தியோடு இப்போது பணியாற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை..!)



ஸ்வாமி மணவாள மாமுனிகளின் திருவரசு குறித்து “The Lost Thiruvarasu of our Last Acharya' என்று ஒரு கட்டுரையினை பிரசுரித்தேன். இப்போதும் இதனை சீரமைக்க, என் மரியாதைக்குரிய பெரியவர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ ஸ்வாமிகள் மற்றும் அவரது குழுவினர், இதற்காக மிகவே போராடிக்கொண்டிருக்கின்றனர்.



கோபுரப்பட்டி...! தலைவெட்டப்பட்ட நிலையில் பல சிலைகள், மூன்றாக துண்டாக்கப்பட்ட ஆதிசேஷன் படுக்கை, படுக்கையிலிருந்து பல அடிகள் துாரம் தள்ளி வீசப்பட்ட அரங்கனது சிலாத் திருமேனி..! ஆதிசேஷனது சிரஸ்கள் அனைத்தும் செதுக்கி பாழ்படுத்தப்பட்டிருந்தது. மூலஸ்தானம் முழுதும் மண்ணும், கல்லும், பாம்பு புற்றுகளும்...! வெறிகொண்டு இதனை அழித்த வெறியர்களின் வெறித்தனத்தினைப் பறைச்சாற்றியது அந்த மூலஸ்தானம்..!



என் உள்மனம் அழுதது...! இதயம் வலித்தது..! ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற வெறி எனக்கு உண்டாயிற்று..! நேரில் சென்று பார்க்கவேண்டும் என்ற உந்துதல் உடனே கிளம்பியது..!





கோபுரப்பட்டியின் அன்றைய நிலை






வளர்ச்சித் தொடரும்...!

No comments: