Monday, August 8, 2016

6ம் ஆண்டுவிழா

அனைவருக்கும் நமஸ்காரம்.

நலம்தானே..!

கோபுரப்பட்டி வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.  அது உருப்பெற்று, அனைவருக்கும் அருள் சுரந்து, தம்மை நாடி வந்தோரின் நலம் காத்து, தமது ஆறாவது ஆண்டுவிழாவினை எதிர்நோக்கியுள்ளது.

வரும் ஆகஸ்டு 21ம் தேதி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

அனைவரும் வாருங்களேன்.

அன்புடன்
முரளீதர பட்டர்

Wednesday, June 29, 2011

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!வளர்ச்சி-15 29.6.2011

ஸ்ரீ குணரத்னகோசத்தில் பட்டர் தாயாரைப் பார்த்து ஒரு ஸ்லோகத்தில்”ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:

பொருள் – தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய். இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே! நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி, நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய். இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

விளக்கம் – இங்கு ஸ்ரீரங்கநாச்சியார் வெட்கப்பட்டு அமர்ந்துள்ளதாக ஏன் கூற வேண்டும்? இதன் காரணம் – இந்தக் குழந்தை நம்மிடம் வந்து வேண்டி நின்றதைக் கொடுத்தோமா இல்லையா? நாம் குறைவாகக் கொடுத்துவிட்டோமோ? – என்று எண்ணுகிறாள் போலும்.”

-(நன்றி திரு ஸ்ரீதரன் www.namperumal.com)

என்று வர்ணிககின்றார். இந்த வர்ணனை அடியோங்களைப் பொறுத்தவரை
முழுவதும் உண்மையாக ஆனது. எந்தவித மூலதனமும் இன்றி தாயாரின் கடாக்ஷம் ஒன்றே பெருந்தனமாகக் கொண்டு ஆரம்பித்த இந்த கோபுரப்பட்டியின் கைங்கர்யத்தில் தாயாரின் அற்புதமான கடாக்ஷம் எழுத்தால் விவரிக்க இயலாதது.இங்கு விக்ரஹரூபத்தில் பெருமாளைக் கூட விட்டுவிட்டு தாம் மட்டும் தனியே சென்னைக்குப் பயணித்தாள். அங்கு உருப்பட்டூர் திரு.சௌந்திரராஜ ஸ்வாமியின் இல்லத்தில் சுமார் ஒரு வருடகாலம் அதியற்புதமாய் ஆராதிக்கப்பட்டாள். சென்னையிலும், ஏன் உலகமெங்கும் தாயாரின் கடாக்ஷமும், கோபுரப்பட்டியின் கைங்கர்யமும் பரவலாயிற்று. கோபுரப்பட்டியினையும், தாயாரையும் பட்டித்தொட்டிகளில் எல்லாம் பரக்கப் பேசவைத்தவர் உருபட்டூர் ஸ்வாமி அவர்கள். தாயார் அவரது இல்லத்தில் ஒரு மூத்த உறுப்பினராகவே ஆனாள்.அங்கிருந்தபடி கோபுரப்பட்டியின் கைங்கர்யத்திற்கு அவர் ஒப்புக்கொண்டதைவிட இருமடங்கிற்கும் அதிகமாகவே செல்வம் சேர்த்தாள்.இதைத்தவிர நிறைய வஸ்திரங்கள், நகைகள, பூஜா பாத்திரங்களும் கோபுரப்பட்டிக்குச் சேர்ததாள்.பிரதிஷ்டை ஏதும் ஆகாமலிருந்தபோதே தாயாரின் கருணையும், லிலைகளும் அபாரமாய் இருந்தது. நிறையபேர்களின் வேண்டுதல் நிறைவேறியது. எங்களின் பெரும்பாரமும் தீர்ந்தது. ஆம்..! தாயார் ஸந்நிதி பணி நிறைவேறி மீதமுள்ள பணம் பெருமாள் ஸந்நிதி நிர்மாணத்திற்கும் பயன்பட்டது..!

Sunday, April 10, 2011

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! வளர்ச்சி-14 10.4.2011

உருப்பட்டூர் திரு. சௌந்திரராஜன் என்பவர் மிக உயர்நத பதவியிலிருந்து
(IRS) ஓய்வு பெற்றவர்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் வைணவததிற்காக அயர்வில்லாது உழைப்பவர்.
இவரது அயர்வில்லா வைணவப்பணிக்கு பின்புலமாகயிருப்பவர் அவரது தர்மபத்தினியாவர்.

இவர் திருவஹிந்திரபுரத்தில் ஸ்ரீஹயக்ரீவருக்காக ஔஷதகிரியில் ஒரு அற்புதமான மண்டபத்தினைக் கட்டியவர். ஸ்ரீஹயக்ரீவ உபாசகர். இவரது வழிகாட்டுதலினால் பயனடைந்தோர் ஏராளமானவர்கள். ஸ்ரீஹயக்ரீவரின் பல்வேறு ஸ்துதிகள் அடங்கிய ”கதம்பமாலா” என்னும் இவரது படைப்பு மிக்க பிரசித்திப்பெற்றது. “சின்ன சின்ன விஷயங்கள்“, “தீட்டு” போன்ற பல உபயோகமான ஆன்மீக படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.

இத்தம்பதிகள் அரங்கனைத் தரிசிக்க வ்ந்திரு்ந்தார்கள். கோபுரப்பட்டியினைக் காண அழைக்கப்பட்டனர். கோபுரப்பட்டியில் நடைபெற்றுவரும் திருப்பணிகளை கண்ணுற்றனர்.

என்னுடைய மனதில், ”தாயார் ஸந்நிதிக்காக இப்போது இவரிடம் கேள்” என்று ஒரு
குரல் ஒலி..! இது அரங்கன் ஆணை எனபபுரிந்தது.


”தாயார் ஸந்நிதி கட்டுமானப் பணிகளை தேவரீர் எடுத்து நிறைவேற்றித் தரவேண்டும் ஸ்வாமி..!” என உருப்பட்டூர் ஸ்வாமியிடம் யாசித்தேன்.


அப்போது ஸ்வாமி தற்போதுள்ள மடப்பள்ளியின் மேலுள்ள ஒரு கல்லின் மேல் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அவரது மனைவி நின்று கொண்டிருந்தாள்.
இந்த காட்சி இன்னமும் என் மனதில் பசுமையாக புகைப்படம் பிடித்தாற்போன்றுள்ளது.

ஸ்வாமி தன் மனைவியை அண்ணாந்து “ஓப்புக் கொள்ளலாமா..?” என்கிற தோரணையில் நோக்குகின்றார். அவரது மனைவியின் முகத்தில் ஒரு தெய்வீக பரவசம் பரவுகின்றது.
அந்த பரவசத்தில் அவர்கள் அணிந்திருந்த வைரக்கம்மல்கள் ஒரு அதீத ஒளி பரப்பின.

ஸ்வாமியும் இதனை கண்ணுற்றிருப்பார் போலும்..! உடனடியாக ஒப்புக்கொண்டார் ஒரு நிபந்தனையுடன்..!

தாயாரின் விக்ரஹத்தினை ஒரு வார அவகாசத்துடன் தனது கிருஹத்திற்கு எழுந்தருளப் பண்ணி தான் ஆராதனை செய்யவேண்டும் என்று கேட்டார்.

மிக்க மகிழ்வோடு, ஒரு பெரும்பாரம் குறைந்த நிறைவோடு, நானும் ஆடிட்டர் திரு. இராமச்சந்திரனும் ஒப்புக்கொண்டோம்.

தாயார் சில நாட்களுக்குப்பின் சென்னைக்கு அவரது இல்லத்திற்கு பயணித்தாள்..!

Saturday, January 22, 2011

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! வளர்ச்சி-13 22.1.2011

நாம் கோவில் விஷயமாக ஒருவரைக் காண்பது என்பதைக் காட்டிலும், கோபுரப்பட்டியினைப் பொருத்தவரை, பகவான் சம்பந்தப்பட்ட நபரை, எங்களைக்
காணுமாறுச் செய்தான் அல்லது காட்டிக்கொடுத்தான் என்பதுதான் சாலப்பொருந்தும்.தாயார் ஸந்நிதி கட்டுமாணப்பணிக்கு யாரை அணுகுவது என்ற சிந்தனையில்லாமலேதான் (கவலையில்லாமல் கூட என்று சொல்லலாம்), அன்று ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்குப் பணிக்குச் சென்றேன்..!தாயார் ஸந்நிதி மூலஸ்தானம்..! என்னுடன் கூட அன்று பண்டாரி சுரேஷ் என்னும் அருமை நண்பர்..! இவர் கோபுரப்பட்டி வளர்ச்சிப் பற்றி கேட்டப்படியிருக்கும்போது, திடீரென நான் அவரிடம் “நீ ஏன் தாயார் மூலவர் கைங்கர்யத்தினை ஏற்கின்றயா..?“ என்று கேட்டபோது ஒரு நிமிடம் அவரது ரோமங்கள் இறையுணர்வில் சிலிர்த்து அடங்கியமைக் கண்டேன். நானே இந்த கைங்கர்யத்திற்காக இவரிடம் பேசுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.இதெல்லாம் தாயாரின் திருவுள்ளம்..!பண்டாரி சுரேஷின் கண்களில் ஆனந்த கண்ணீர்..! மிகுந்த சந்தோஷமுடன் ஓப்புக்கொண்டார்.ஓக்கரை(துறையூர்) திரு. சேகர் (ஏற்கனவே கோபுரப்பட்டி விக்ரஹங்கள், ஆதிசேஷன் முதலானவற்றைச் செவ்வனேச் செய்தவர்) அழைக்கப்பட்டார்.சுமார் ரூ.20000/- மதிப்பீட்டீல் தாயார் மூலவர் திருவுருவம் அமைக்க தீர்மாணம் செய்யப்பட்டு முன்பணம் கொடுக்கப்பட்டது.இன்று (22.1.2011) கூட தாயார் ஸந்நிதி பணிதான் எனக்கு..! என் கூட பண்டாரி திரு.சுரேஷ் அவர்கள்தாம்..! அவர் நண்பர் ஒருவர் தரிசிக்கவந்த போது சுரேஷின் மூலவர் கைங்கர்யத்தினைப் பற்றிச் சொன்னேன்..! அதற்கு திரு. சுரேஷ் அவர்கள், ”இதெல்லாம் நான் நினைத்தேக்கூட பார்த்திராத ஒரு பாக்யம்..! எவ்வளவோ பேர் நீங்கள் சொல்வதைக் கேட்கயிருக்கையில், சாதாரணமான எனக்கு இந்த பாக்யம் அமைந்தது பெரும் புண்ணியம்..!” என்று பணிவாக சந்தோஷமாகச் சொல்கையில் அவரது எளிமை, பண்பாடு கண்டு வியந்தேன்..!தாயார் ஸந்நிதி நிர்மாணம்...? யாரைக் காண்போம்..? என்ற எதிர்பார்ப்போடுயிருந்தேன்..!

Tuesday, January 4, 2011

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! வளர்ச்சி-12 4.1.2011

உற்சவ விக்ரஹங்கள் என்றவுடனே எனக்கு எப்போதும் நினைவிற்கு வருபவர்
சிவஸ்ரீ. ஸ்ரீதரன் அவர்கள்தாம். சைவ சித்தாந்தம் நன்கறிந்தவர். எங்கள் கோவிலின் யானைப்பாகர். அரங்கனிடத்து அலாதிப் பிரியம் கொண்டவர். அகிலாண்டேஸ்வரியின் உற்சவ மூர்த்தம் அளித்தவர். சிற்பங்களின் நுணுக்கங்கள் தெரிந்தவர். “ஸ்ரீரங்கம் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் திருக்கூட்டம்” என்னும் அமைப்பின் ஸ்தாபகர். அவருக்கு சுவாமிமலையில் திரு.இராமகிருஷ்ணன் என்னும் சிற்பங்கள் வார்ப்பவர்தாம் எப்போதும் விக்ரஹங்கள் செய்து தருபவர். இவர் “ஸ்ரீசரஸ்வதி ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ்” எனும் தொழிற்கூடத்தினை நடத்திவருகின்றார். சிவஸ்ரீ ஸ்ரீதரனும் அவரது திருக்கூட்டத்தினைச் சார்ந்த அன்பர்களும், மற்றும் வடக்குச்சித்திரைவீதியிலுள்ள “ஸ்ரீ எதிராஜர் டிரஸ்ட்“ என்னும் அமைப்பினர்களும் சேர்ந்து பெருமாளுக்கு உற்சவர், தாயார் உற்சவர், ஸ்ரீதேவி பூமிதேவி உற்சவ மூர்த்தங்களைச் செய்து தர இசைந்து அதன்படியே மிகச் சிறப்பாக செய்து கொடுத்தனர். கிராமத்திலுள்ள கோவில். ஒரேயொரு பட்டர்தாம் பூஜைகள் செய்யப் போகின்றார். ஆகவே அவர் எளிதில் தனியொரு ஆளாக எழுந்தருளபண்ணுவதற்குத் தோதாக உற்சவ விக்ரஹங்கள் அதிக எடையுள்ளதாக அமையக்கூடாது என்பதில் மிகவும் கருத்தாகயிருந்து குறைந்த எடை கொண்டதாகவும், அருமையான நேர்த்தியுடனும் உற்சவவிக்ரஹங்கள் வார்க்கப்பட்டன.கையிலுள்ள பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது. ஆடிட்டர் திரு.இராமச்சந்திரன் மிகவும் சிக்கனமாக செலவு செய்தும் கற்கள் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது. அவரின் சிந்தனையில் அரங்கன் அவ்வப்போது மகத்தான சில யோசனைகளைச் செய்ய வைப்பான். கற்கள் வாங்கவேண்டிய சூழ்நிலையில் கோவிலின் மதிற்சுவர்கள் ஆடிட்டரின் கவனத்தினை ஈர்த்தது. மதிற் நான்கு அடி அகலம் கொண்டதாக அமைந்திருந்தது. பாழடைந்தும் கிடந்தது. பணியாளர்களில் ஒரு சாரர்களை மதிலைப் பிரிப்பதற்கு நியமித்தார். மதிற்சுவர்கள் பிரிக்கப்பட்டு தரமான கற்கள் மண்டபத்திற்கென பயன்படுத்தப்பட்டன. மண்டபமே் வளர்ந்து கொண்டிருந்தது. கோவில் முன்னால் இருந்த அமைப்பினை விட மூன்றடி உயரத்தில் எழும்பிக்கொண்டிருந்தது.தாயார் ஸந்நிதி..? ஸ்ரீரங்கம் போன்று தனியாக வாயுமூலையில் (வடமேற்கு மூலை) அமைப்பது என தீர்மானம் செய்தோம்..!அமைக்கலாம்..! ஆனால் அதற்கான செலவிற்குப் பணம்...? யாரேனும் முன்வருவார்களா..? எங்கள் சுமையினை பகிர்ந்து கொள்வார்களா...? கோவில் அமைத்தாக வேண்டும். தாயார் மூலவர் சிலை வடித்தாக வேண்டும்..! ஏறத்தாழ இவையனைத்தும் செய்வதற்கு சுமார் 5 லட்சத்திற்கும் மேல் ஆகுமே..! எங்கு செல்வது..? யாரைக் காண்பது...?

-தொடரும்..!

Friday, December 3, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை - வளர்ச்சி-11 3.12.2010

அரங்கனது சங்கல்ப்பம் இன்றி இந்த ஒரு மகத்தான கைங்கர்யம் எங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எனவேதான் இவ்வளவு வருடங்களாகியும் சீரமைக்க முடியாத ஒரு கோவில் எங்களைப் பிரி்த்து பழுதுபார்ப்பதற்கு ஒரு வாய்ப்பளித்தது. இந்த வாய்ப்பினை நம் சக்திக்கு முடிந்தவரை பயன்படுத்துவோம் என்று நானும் ஆடிட்டரும் ஒருமித்த சங்கல்ப்பத்துடன் செயல்பட ஆரம்பித்தோம். நம் மனதில் அந்தர்யாமியாய் வீற்றிருக்கும் அரங்கன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான். அந்த: ப்ரவிஷ்ய பகவந்தகிலஸ்ய ஜந்தோ: ஆஸே துஷஸ் தவ கரீச ப்ருசம் தவீயாந் | ஸத்யம் பவேயமதுநாபி ஸ ஏவ பூய: ஸ்வாபாவிகீ தவ தயா யதி நாந்தராய: || -(ஸ்வாமி தேசிகரின் ஸ்ரீவரதராஜ பஞ்சாசத்-(33)- அத்திகிரி பெருமாளே! நீ எல்லாப் பிராணிகளிடத்தும் உட்புகுந்து அந்தர்யாமியாய் அவற்றின் அருகிலேயே இருக்கின்றாய். ஆயினும் உன்னுடைய குணங்களையும் பெருமையையும் அறியாத அடியேன் நீ அருகில் இருப்பதை அறியாதவனாய் நெடுந்தூரத்திலேயே விலகியிருந்தேன். இப்பொழுது உனது இயற்கைக் கருணையினால் உன்னை அறிந்து அடியவனாகிவிட்டேன். இப்படி உன் கருணை என் அறியாமைக்கு எதிராய் செயல்பட்டு, விலகிச் செல்லும் என்னைத் தடுக்காவிட்டால் என் கதி என்னவாயிருக்கும்..? உனக்கு மிகவும் தூரத்திலேயே இருந்திருப்பேன்..! அரங்கன் அந்தர்யாமியாய் இருக்கின்றான்..! அவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்..! இயங்க வைக்கும் சக்தி அவன்..! இயங்கும் இயந்திரமே நாம்..! இந்த ஒரு நினைவே நமக்கு ஒரு மிகப் பெரிய ரக்ஷை. நாம்தான் செய்கின்றோம்..! நம்மால்தான் இந்த காரியம் ஆயிற்று என்று கர்வப்பட்டு கொள்வோமானால் உறுதியாய் பங்கப்படுவோம். அழிவோம் அல்லது அழிவிற்கு நிகரான மானபங்கம் ஏற்படும். இதிகாசங்கள் ஆகட்டும், வரலாறு ஆகட்டும், அரசியல் ஆகட்டும் கர்வபட்டவர்கள் அனைவருமே பங்கப்பட்டிருக்கின்றனர். இதுதான் நியதி..! கோவிலின் ஈசான்ய மூலையின் மீது அதிககவனம் எடுத்துக்கொள்ளபட்டு சுத்தமாக சீரமைக்கப்பட்ட்து. கிணறு தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு அதற்கு சுற்றுப்புற சுவர்கள் அமைக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் ஏதும் சர்ப்பம் தென்பட்டால் எக்காரணம் கொண்டும் கொன்று வீடாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. (கோவில் காரியங்கள் முடியும் வரை எவருக்கும் சர்ப்பங்கள் ஏதும் தென்படவேயில்லை. திரு ஜோதிகுமார் என்ற மின்சார தொழிலாளி மட்டும், கோவிலுக்கு வரும்போது, சுமார் 20அடி நீளமுள்ள ஒரு சர்ப்பத்தினைப் பார்தது அதிர்ந்து போனார். அது இவருக்கு எந்தவொரு பயத்தினையும் அளிக்காமல் சென்று விட்டதாகக் கூறினார்). தீய ஆவிகள் - இருக்கலாம். உறுதியாக ஏதும் சொல்ல முடியவில்லை. என்றாலும் திரு.சுந்தரேசன் மற்றும் திரு.முரளீ ஆகிய இருவர் மின்சாரப் பணி செய்யும் போது ஓரிடத்தில் ஓர் ஆவி உருவத்தினைக் கண்டதாகக் கூறினார்கள். எப்படியிருந்தாலும் சூரியன் உதித்தால் இருள் மறையத்தானேச் செய்யும். பெருமாளும், தாயாரும், பரிவாரங்களும் கூடிய விரைவில் அமர்ந்து மணக்கச் செய்யப்போகின்றார்கள் அப்போது இவைகள் விரட்டப்படும் என்று உணர்ந்தோம். சிறுவன் முன்னெச்சரிக்கையாகக் கூறியதும் அவனருள்தான். ஒரளவுக்கு அவன் எச்சரிக்கைச் செய்ததற்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு திருப்தியடைந்தோம். சரி..! இனி கோவில் பணி குறித்துக் காண்போம்..! ஒருவழியாக மூலவர், ஆதிசேஷன் ஆகிய இருவருக்கும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து விட்டோம். உற்சவ மூர்த்தங்களுக்கு என்ன செய்வோ்ம்..? அரங்கா..! நீ யாரை இதற்கெனக் காட்டியருளப் போகின்றாய்..? -தொடரும்..!