Wednesday, August 10, 2022

கோபுரப்பட்டிப் பெருமாள் கோயில் ஸம்ப்ரோக்ஷணை“2022 - 02 (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்) லீலாசுகர் எழுதிய “கிருஷ்ண கர்ணாம்ருதம்” எனும் அற்புதமான காவியத்தில், ”க்ருஷ்ணேனாம்ப கதேன ரந்து-மதனா ம்ருத்பக்ஷிதா ஸ்வேச்சயா” ”...அம்மா..! விளையாடுவதற்கு வந்த கிருஷ்ணன் மண்ணைப் பட்சணம் போன்று புசிக்கின்றான்..” என்று பலராமன் தாயான யசோதையிடம் கூறுகின்றான். வாயைத் திற்ந்து பார்த்த யசோதைக்கு உலகமே அதில் தெரிந்து மயங்குகிறாள்..! மண்ணையும் அவன் தின்கிறான் - வெண்ணையையும் அவன்தான் களவாடுகின்றான். அலகிலா விளையாட்டு அவனுடையது. இது போன்று பாம்பணைத் துறந்து மண்தரையில் பாம்புப் புற்றுகள் சூழ, கோபுரப்பட்டிப் பெருமாள் துயின்றதையும் கண்ணுற்று வருந்தின காலம் சென்று, நம் வருத்தம் தீர்ந்திட இன்று பாம்பணையில் கம்பீரமாகப் பள்ளி கொள்ளும், கண் கொள்ள பாக்கியமும் கிடைக்கப் பெறுகின்றோம். இன்னும் கோலகலமாக கோயிலை மாற்றுவோம். நடைபெறவுள்ள திருப்பணியிலும், மஹா ஸம்ப்ரோக்ஷணையிலும் பங்கு கொண்டு, பள்ளி கொண்டானின் பரம அனுக்ரஹத்தினைப் பெறுவோம் வாருங்கள்..!
உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே குல தொல் லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே (6-10-1-)

No comments: