Monday, October 4, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!வளர்ச்சி-05 01.10.2010

சில சமயங்களில் மௌனம் என்பது மிகப்பெரிய வெற்றியினைக்கூட கொடுக்கும். நாம் கொட்டிய வார்த்தைகளுக்கு நாம் அடிமை. கொட்டாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான்.



மீண்டும் ஊர் சபை கூட்டப்பட்டது. ஊராரில் சிலருக்கு அவர்களுக்குள்ளேயே சிலரைப் பிடிக்கவில்லை என்பது புரிந்தது. கூட்டத்தில் கூடுமானவரை உள்ளூர் மக்கள் தகுதியானவர்களாயிருப்பின் அவர்களுக்கே வேலைவாய்ப்பினை அளிப்பதாகவும், கோவிலைப் பிரிக்கும் போது, கிராம முக்கியஸ்தர்கள், தாசில்தார், காவல் துறை அதிகாரிகள் போன்ற முக்கிய அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் அளித்து, அவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் என்று உறுதியளித்தோம். ஒரளவு சமாதானமாகி கூட்டம் கலைந்தது.

முறைப்படி கோவிலைப் பிரிக்கும் தகவல் அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு கோவிலின் கற்கள் அனைத்தும் வரிசை எண் எழுதப்பட்டு பின்னர் அகற்றப்பட்டு, தகவல் கொடுக்கப்பட்டு வந்திருந்த அனைத்து அதிகாரிகளின் முன்னிலையில் அஸ்திவாரமானது பிரிக்கப்பட்ட போது அதிர்ந்து போனோம்.


அஸ்திவாரமே காணோம். ஒரு 'Baloon Packing. கிராமத்து மக்கள்கள் எதிர்பார்த்தது போல் புதையல் ஏதும் இல்லை - புழுதி மண்தான் மிச்சம். சுமார் 8 அடிக்கு புதிதாக புதைவடை தோண்டபட்டது. புதைவடைக்கு 32 லோடு மண்ணும், “சோலிங்கர்“ எனப்படும் சிறிய பாறாங்கற்களும், சிமெண்ட் கலவைகளும் கொட்டப்பட்டு, ஒரு உறுதியான அஸ்திவாரம் அமைத்தப்போது, எங்களின் மன உறுதி குலைந்தது. கோவிலுக்கு என்று சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் அனைத்தும் அஸ்திவாரத்திற்கே செலவழிக்கப்பட்டு அம்பேல் ஆனாது.


“கவலைப்படாதே“ என்று அபயம் காட்டிவிட்டுப் போன அந்த அம்மையாரிடமிருந்தும் எந்த தொடர்புமில்லை.

எப்படியோ அந்த அம்மையாரைத் தொடர்பு கொண்டு கிராம கமிட்டியினரோடு ஆடிட்டரும் பயணம் செய்து அம்மையாரை சந்தித்தனர்.

“கோபுரப்பட்டி நிதிநிலைமை மிகவும் மோசமாகயுள்ளது. பணம் புரட்டவே முடியவில்லை - நீங்களே எப்படியாவது பார்த்துக் கொள்ளுங்கள்..“ என்று கைவிரித்து எங்களை நட்டாற்றில் தள்ளிவிட்டு தான் ஒதுங்கிக் கொண்டார்.

அனைவரது முகமும் வாடிப்போனது. கண்கள் கண்ணீர் குளமானது. ஆடிட்டர் மட்டும், அந்த அம்மையாரை கடிந்து விட்டு, உறுதியோடிருந்தார்.

மறுநாள் கோபுரப்பட்டி வந்து சேர்ந்த அனைவரையும், நேரில் சந்தித்தேன்..!

ஊர் பஞ்சாயத்துத் தலைவரும், கோவில் நிர்வாக கமிட்டித் தலைவருமான திரு அனந்தராமன் அவர்கள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோட பேச ஆரம்பித்தார்.

“சாமி..! எங்களுக்கு எங்கள் உயிரை விடுவதைத் தவிரை வேற வழியேயில்லை..! உங்களையெல்லாம் நம்பி கோவிலைப் பிரித்தது பெரும் தவறு. நாங்கள் எல்லாம் இனி எப்படி இந்த கிராம மக்கள் முன்னிலையில் நடமாடுவோம்..! இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நாங்கள் அனைவரும் தற்கொலைச் செய்து கொள்ளப்போகிறோம்..!” என்று ஒரே உறுதியோடு கூறினார்.

அதிர்ந்து சுக்குநுாறாக வெடித்துப்போனேன் நான்...!
....வளர்ச்சித் தொடரும்...!


11.08.2008 அன்று


21.08.2008 அன்று


05.09.2008 அன்று

23.09.2008 பூமி பூஜை அன்று

2.10.2008 அஸ்திவாரம் அமைத்தல்


23.10.2008 அன்று

No comments: