Thursday, October 7, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! வளர்ச்சி-06 04.10.2010

ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் ஒரு நிகழ்வு இது. ஸ்ரீருக்மணி ஒரு வேதமறிந்த வயோதிக அந்தணர் மூலமாக ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஒரு மடல் கொடுத்தனுப்புகிறாள். இந்த மடலில் 7 பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பாடலில். “ஹே கிருஷ்ணா..! உன்னிடத்திலுள்ள நல்ல குணம், கெட்ட குணம் இரண்டையுமே பெரியோர்கள் சொல்ல அறிந்துள்ளேன்“ என்கின்றாள். (ஸ்ரீமத் பாகவதம் - 10வது ஸ்கந்தம்.)

பகவானுக்கு அப்படி என்னதான் கெட்ட குணம்...? ஆச்சரியமாகயில்லை...!

உண்டு..! அவனை யார் நேசிக்கின்றார்களோ அவர்களை நோகடித்து விடுவான். கண்களில் நீர் பிழிய பிழிய அழவிடவும் செய்வான்..! இவையெல்லாம் தன்னிடத்து பூரணப்பற்று ஏற்பட அவன் செய்யும் திருவிளையாடலே..!

இங்கு, கோபுரப்பட்டியில், ஏதேனும் விபரீதமாக ஆசைப்பட்டோமா..? “ ஐயோ...! “ரங்கநாதர்“ இப்படி மண்ணிலும் புழுதியிலும் சயனித்திருக்கின்றாரே..! கோவில் பாழடைந்து விட்டதே..!“ என்றுதானே கைங்கர்யங்கள் செய்ய ஆரம்பித்தோம். அடுத்தடுத்து போட்டு இப்படித் தாக்குகின்றாரே..! என்று மிகவே வருந்தினேன்.

ஆடிட்டர் மட்டும் உறுதியோடு சொன்ன ஒரு வார்த்தை எங்களை உறுதிகொள்ள செய்தது. “ஸ்வாமி..! எப்போது இவ்வளவு நூற்றாண்டுகளாக தன் கோவிலைப் பிரிக்கக்கூட அனுமதியாத ரங்கன், இப்போது பிரிக்க அனுமதித்திருக்கின்றானோ, அவன் கண்டிப்பாக இதனைக் கட்டி முடிக்கவும் அனுக்கிரஹம் செய்வான்..! இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்..! கவலைப்படாது நம்மால் செய்ய முடிந்தததைச் செய்வோம்..! செய்து முடிப்பது அவன் செயல்..!” என்று அனைவரையும் தேற்றினார்.

உண்மைதான்..! அவன் அனுக்ரஹம் இல்லாவிடின் ஒரு கல்லைக்கூட நம்மால் பெயர்த்து எடுத்திருக்க முடியுமோ...?

ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டேனே.!

கற்களையெல்லாம் பிரித்து அஸ்திவாரம் அமைக்கும்முன் அந்த கோவிலில் சில கல்வெட்டுச் செய்திகள் காணப்பட்டன.

அவற்றையெல்லாம் சென்னை தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற திரு இராமச்சந்திரன் மூலமாக, கல்வெட்டில் உள்ள அனைத்து செய்திகளையும் ஆராய்ந்தோம்.

கோபுரப்பட்டியில் ஒரு காலத்தில் இருந்த “வைணவர்களின் நிலை“ அதில் சொல்லப்பட்டிருந்தது. எத்தகைய தியாகபூமியாக கோபுரப்பட்டி திகழ்ந்துள்ளது...!

....வளர்ச்சித் தொடரும்...!

No comments: