Wednesday, October 20, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!வளர்ச்சி-06 04.10.2010

கல்வெட்டின் மூலமாக பல அரிய செய்திகளை நாங்கள் அறிய முடிந்தது. இத்தலத்தினைப் பற்றி குறிப்பிடும் போது “புதுக்கிடக்கை“ என்று குறிப்பிடுகின்றது. இதன் மூலம் “பழைய கிடக்கை“ ஸ்ரீரங்கம் என்பதும், அதே போன்று விளங்கும் இந்த பெருமாள் “புதுக்கிடக்கை“ என்பதும் தெளிவானது.



“ஜலசயனத்துப் பெருமாள்“ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளது.

அன்றிலிருந்து இன்று வரை இருபுறமும் பெருவளவாய்க்கால் மற்றும் கம்பலாறு எனும் இருவாய்கால்கள் ஓடிக்கொண்டுள்ளது. ஆகவே ஜலசயனத்து பெருமாள்தான்.



1323ம் ஆண்டு “வீரவல்லாளன்“ என்ற ஒரு ஹொய்சாள மன்னன் தலைமையில் திருக்குடமுழக்கு செய்யப்பட்டதாக ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது. எனவே கோயில் எப்போது கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. இதற்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும்..!



அடுத்து வந்த செய்திதான் அனைவரையும் சிதையச்செய்தச் செய்தி..!



உலுக்கான் படையெடுப்பின் போது வைணவர்களின் ஒரு சிறு குழுவினர் “கந்தாடை தோழப்பர்“ என்பவர் தலைமையில் இங்கு தப்பித்து வந்ததாகவும், இந்த முகமதிய படையினர் ஸ்ரீரங்கத்திலுள்ள 12000 வைணவர்களின் தலையினைக் கொய்து கொன்றதாகவும், அங்கு இறந்த 12000 வைணவர்களுக்கும் இங்கு தப்பித்து வந்த தாங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு ஆடி அமாவாசையன்று பெருவள வாய்க்காலின் கரைதனில் “திதி“ கொடுத்ததாகவும் கல்மனதைக் கூட கரையசெய்யும் விதமாக அந்த கல்வெட்டுச் செய்தி கூறியது. 12000 வைணவர்களின் தலைகொய்த செய்தியினை “பன்னீராயிரம் தலைத்திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்“ என்று கோயிலொழுகு செய்தி ஒன்று கூறுகின்றது. ஆனால் இறந்த அந்த பன்னீராயிரம் வைணவர்களுக்கு ஈமக்கடன் செய்த செய்தி வைணவஉலகுக்கே புதிய செய்தி. அதனை கோபுரப்பட்டியில் கொடுத்திருக்கின்றனர் என்பது மிகவே நெகிழச் செய்தது.

அவர்களுக்கு ஈமக்கடன் செய்வதற்காகவே அரங்கன் இவர்களை இங்கு அனுப்பினானோ..?



“கந்தாடை தோழப்பர்“ என்பவர் முதலியாண்டானின் மகன் என்று படித்ததாக ஞாபகம்..! இது குறித்து பார்க்கவேண்டும்..!



பன்னீராயிரம் பேருக்கும் இந்த தலத்தினில் அனைத்து வைணவர்களும் ஒன்று சேர்ந்து ஒருமைப்பாட்டோடு திதிகள் கொடுத்ததால் இது ஒரு சிறந்த பித்ருதோஷ பரிகாரத் தலமே..!



இங்குள்ள வைணவர்கள் மட்டுமே அந்த காலகட்டத்தில் எஞ்சியிருந்தமையினால் இத்தலம் வைணவம் வளர்த்தத் தலம்..!



ஸ்ரீரங்கத்தில் பெரியபெருமாள் கல்திரையிட்டு ஸ்ரீரங்கம் முழுதும் உலுக்கானின் ஆட்கள் இருந்தமையினால் அப்போது பெரியபெருமாளாக இந்த பெருமாளையேக் கொண்டாடியிருக்க வேண்டும்..!



இதைத் தவிர வேறு சில செய்திகளும் கிடைத்தன. இன்னொரு கல்வெட்டு கி.பி 1498ல் “இலங்கை உலகன்“ என்னும் மன்னனின் தலைமையில் இத்திருக்கோவில் திருக்குடமுழக்கு செய்யப்பட்டதாக சொன்னது. அதற்கு பிறகு எப்போது இது சிதிலமடைந்ததோ..? யார் சிதிலப்படுத்தினரோ...?



சுமார் 511 வருடங்களுக்குப்பின் இப்போதுதான் அனுமதித்துயிருக்கின்றார் இந்த கோபுரப்பட்டியின் நாயகன்..!

No comments: