Wednesday, October 20, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!வளர்ச்சி-07 20.10.2010

வைணவ வளம் மிகுந்திருந்த ஒரு அற்புத தலம்..!



பல வைணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றியத் தலம்..!



இறந்த வைணவர்களுக்கு ஈமக்கடன் செய்ய வசதியாக ஓடிய, நீத்தார்கடன் செய்தவர்களின் கண்ணீரையும் சுமந்துகொண்டு ஓடிய பெருவள வாய்க்கால்..!


திதி நீரையும் கண்ணீரையும் கலந்து கரைத்துக்கொண்டோடிய பெருவளவாய்க்கால்

இறந்தவர்களை எண்ணி எண்ணிக் கதறி இங்குள்ள எவ்வளவு பேர்

இந்த வாய்க்காலின் கரையில் அமர்ந்திருந்தனரோ..?



பிரிந்த உறவுக்கு திதி கொடுக்க உயிர் பிழைத்த சிலர் இங்கு எவ்வளவு துாரம் துடித்திருப்பர்..?



என்னவெல்லாம் பறி கொடுத்து இழந்து இங்கு வந்து அடைக்கலம் புகுந்தனர்களோ..?



இவர்கள் எல்லோருக்கும் ஒரளவு ஆதரவு கொடுத்த, தரிசன தாகம் தீர்த்த பெருமாள், அனைவரது துக்கத்தினையும் ஒரளவு துடைத்து, தற்சமயம் மண்ணில், திருமேனியெங்கும் புழுதி பூசிக் கொண்டும் கிடக்கின்றாரே..!

என்னக் கொடுமையிது..!



என்ன செய்யலாம்..! எப்பாடுப் பட்டேனும் இவ்வரங்கனை பாம்பணையில் சுகமாக பள்ளிக்கொள்ளச் செய்ய வேண்டும்..! எவ்வளவு கஷ்டம் மற்றும் நஷ்டம் ஏற்படினும் பரவாயில்லை..! எடுத்த செயலை முடித்தே ஆகவேண்டும்..!



”அரங்கா..! நீதான் என்னுடன் துணையாயிருக்க வேணும்..! இந்த காரியத்தினைப் பூர்த்தி செய்து எங்கள் மனம் குளிரச் செய்ய வேணும்..! உனக்கு ஏதும் தேவையில்லை..! அர்த்தமும் நீயே..!

அனர்த்தமும் நீயே..! ஆனால் இதனையெல்லாம் கண்டு சகிக்கும் எண்ணம் எங்களுக்கில்லை...! பல நூற்றாண்டுகளாய் நீ கிடந்தது போதும்..! இந்த ஜன்மத்திலாவது எங்களுக்கு ஒரு வாய்ப்பினை தந்தருள்..! எவரையேனும் நல்மணமும் கொடையுள்ளமும் கொண்ட, உன் பக்தர்களில் ஒருவரை எங்களுக்குக் காட்டி அருளுவாய்..! இந்த கிராம ஏழை மக்களிடத்தும் சக்தியில்லை..! வீடு வீடாய் சென்று வசூலித்தாலும் முடியக்கூடிய காரியமில்லை இது..! என்ன செய்வோம் நாங்கள்..!

ஒரு புறம் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று விரக்தியோடு இருக்கும் சில நிர்வாகஸ்தர்கள்..! இன்னொரு புறம் எப்படியும் பெருமாள் வழிகாட்டுவார் என்று உறுதியான எண்ணத்தோடு நானும் ஆடிட்டரும்..! அரங்கா..! நீ யார் பக்கம்..? உனது நூற்றாண்டுகள் கடந்த உறக்கம் போதும்..! இனி நீ மக்களைக் கண்டு களிக்கும் காலம்..! கண் திறவாய்..! எங்களுக்கு உன் கடைக்கண் பார்வை அருளுவாய்..!”

என்று அரவணையின்றி கிடந்த அரங்கனை மனதார வேண்டியவாறு அங்கு சில மணித்துளிகள் மன்றாடிக் கிடந்தேன்..!



என்னுடைய செல்போன் சிணுங்கியது..! “காங்கோ“ விலிருந்து என் ஆத்ம நண்பர்..! இவருக்காக நான் சில பிரார்த்தனைகள், ஹோமங்கள் முதலானவைகளைச் செய்துள்ளேன். இதனால் பல சிக்கல்களிருந்து இவர் மீண்டதாகச் சொல்லுவார்..! என் உள்மனம் பேசியது..! “அரங்கன்தான் இவரை இந்த சமயத்தில் உன்னிடத்து இவரைக் காட்டிக் கொடுத்துள்ளான்..! வாய்ப்பினை நழுவ விட்டுவிடாதே! “ என்று.

No comments: