Friday, October 22, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!வளர்ச்சி-08 23.10.2010

என்னுடன் அலைபேசியில் பேசிய அந்த “காங்கோ“ நண்பர் இன்னும் ஓரிரு நாட்களில் திருவரங்கம் வரப்போவதாகவும் சில ஹோமங்கள் செய்யவேண்டும் எனவும் அறிவித்தார்.



இப்போது சொல்வதைவிட அவரே இந்த பரிதாபநிலையை நேரில் கண்டால் மிகவும் நல்லது என்று மனதில் பட்டது.



நேரில் வந்தார். முதல் நாள் திருப்தியாக ஹோமம் முடிந்தது. அவரை அழைத்துக் கொண்டு கோபுரப்பட்டி வந்தோம். மூலஸ்தானம் வரை வந்தவர் வெளியில் இந்த நிலைமையில் அரங்கன் இருப்பதைக் காண சகிக்காது வெளியே ஓடிவந்துவிட்டார்.



என்ன இது? என்ன கோரமிது? என்று வினவினார்.



அனைத்தையும் எடுத்துச் சொன்னோம். எங்களது பணத்தேவையும் அறிவித்தோம்.



தன்னால் முடிந்தவரை உதவுகின்றேன் என்று உறுதியளித்தார். முன்பணமாக ஒரு கணிசமான தொகையையும் அளித்தார்.



முதல் வேளையாக, துறையூரை அடுத்துள்ள ஓக்கரை எனும் ஊரிலிருந்து திரு.சேகர்
என்னும் கல்தச்சரை அழைத்து வந்தோம்.



அவர் ஆதிசேஷன் படுக்கையினை புதியதாகதான் செய்ய வேண்டும் எனவும்

பெருமாள் திருமேனியினை தன்னால் முடிந்த அளவு சரிசெய்து தருவதாகவும் அறிவித்தார். (பெருமாளின் திருமேனியில் மூக்கு மற்றும் அபயம் காட்டியருளும் வலதுகை ஆகியன சிதிலமடைந்திருந்தது.)



இந்த இடத்தில் எனக்கும் ஆடிட்டருக்கும் சிறிது தர்க்கம் நடந்தது. என் அபிப்பராயம்
என்னவென்றால், தானே தோன்றிய ஸ்வயம்வயக்த பெருமாள் திருமேனியினை மட்டும் எவ்வளவு சிதிலமடைந்திருந்தாலும் அதனை மாற்றக்கூடாது - அதனை சரிசெய்து மீண்டும் வழிபடவேண்டும் என்று பாஞ்சராத்ர ஆகமம் சொல்கின்றது. ஆனால் இந்த பிம்பம் தானே தோன்றியவர் அல்லவே! அதனால் ஒன்று இவரை இங்கேயே பூமியில் புதைத்து விடுவோம் அல்லது இவரது திருமேனி மீது சுதையினால் ஒரு ரெங்கநாதரை உருவாக்குவோம் என்று சொன்னேன்.



அதற்கு ஆடிட்டர் சொன்னவார்த்தை என்னை அதிர வைத்தது..!



“ஏன் ஸ்வாமி..! பண்ணையார் காலில் அடிப்பட்டால் கட்டுப்போட்டுக் கொள்ளலாம்..!
பண்ணைக் கூலியாள் அடிப்பட்டால் சுட்டுக் கொன்று விடலாமா..? ” என்றாரே
பார்க்கலாம்.



ஆடிப் போய்விட்டேன் நான்..!



ஆதிநாயகப் பெருமாள் அசைவதற்குத் தயாராகிவிட்டார். எத்தனை நாட்களாக
கட்டாந்தரையில் உறங்குவான் போன்று யோகம் செய்தாரோ அறியோம். மெதுவாக சுமார் ஒரு 20 ஆட்கள் கூடி ஒரு மினிலாரியில் ஏறி, ஒக்கரையிலுள்ள சிற்ப கூடத்திற்கு பயணப்பட்டார்...



-தொடரும்..!

No comments: