Thursday, November 11, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...!வளர்ச்சி-10 11.11.2010

அந்த சிறுவன் பேசியதன் சாராம்சம் இதுதான்.



1) முதலில் என்னை தகுந்த பாதுகாப்பு தேடிக்கொள்ளச் சொன்னான். (இதனை நாங்கள்
“ரக்ஷை“ என்று சொல்லுவோம். மந்திரபூர்வமாக முதலில் எங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திக் கொள்வோம்.)



2) கோவிலின் வடகிழக்கு (ஈசான்ய) மூலையில் ஒரு குப்பைமேடு இருப்பதாகவும் அதில் பல மந்திரித்து போடப்பட்ட யந்திரங்கள், மந்திரித்து கழித்த சில கழிவுகள், இன்னும் சில அபாயகரமான சூன்யம் வைத்தவைகள் கிடப்பதாகவும், இதனால்தான் கோவில் பொலிவிழந்ததாகவும், இதனை வலுவிழக்கச் செய்ய சில உபாயங்களையும் சொன்னான். ஆனால் இதற்கு முன் என்னை சிறந்த முறையில் “ரக்ஷை“ செய்து கொள்ளச் சொன்னான்.



3) பல பிராமணர்களையும், பசுக்களையும் வதை செய்து கொன்றதால் இந்த கிராமம்
பாழ்பட்டதாகக் கூறினான். இதுவும் சாத்தியமே..! கோவிலை பாழ்படுத்திய அன்னிய சக்திகள் இதனையும் செய்திருக்கலாம்.



4) ஒரு மிகப்பெரிய சர்ப்பம் ஒன்று மூலவர் ஆதிநாயகருக்கு காப்பாகயிருந்து வருகின்றது என்றான்.



5) முன்னொரு காலத்தில் அடியேன் இந்த கோவிலின் வளர்ச்சிக்கு பாடுபட்டதாகவும் , ஏதோவொரு காரணத்தினால் இந்த கோவிலிலேயே வெட்டப்பட்டு இறந்ததாகவும் கூறினான்.



6) கோவில் பல நுாற்றாண்டுகளாக பாழ்பட்டு கிடந்ததால், சில தீய ஆவிகள் நிறைந்திருப்பதாகவும், அதனால் இந்த கைங்கர்யம் செய்பவர்களின் உயிருக்கே தீது நேரிடலாம் எனவும் எச்சரிக்கை செய்தான்.



இன்னும் சில விஷயங்களைக் கூறினான். அதில் முக்யமானவைகளை மட்டும் இங்கு கூறியுள்ளேன்.



அவன் கூறியவற்றில் பல சாத்தியகூறுகள் உள்ளன. எனக்குத் தெரிந்து என் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளி ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டிலிருந்தவர்கள் ஒன்றும் பெரிதாக வாழ்ந்து விடவில்லை. அந்த வீட்டில் ஒரு பெண்ணை ஏதோவொரு துர்ஆவி பிடித்திருந்தது. வீட்டிலுள்ள பெரியவர்கள் இறந்தபின் வீடு சொத்துத் தகராறில் இழுத்துப் பூட்டப்பட்டது. வீடு களையிழந்தது. அதனை நாங்கள் 'பேய்வீடு’ என்றே அழைத்தோம். வெகுவருடங்கள் கழித்து அதனை வாங்கியவர் வீட்டினைச் சுத்தமாக இடித்துத் தள்ளி, சில நாட்கள் அங்கு பசுமாட்டினைக் கட்டி வளர்த்து, அந்த வீட்டினை பசுஞ்சாணியும், மூத்திரமும் பவித்ரமாக்க பின்னரே வீடு கட்டினார். சில வருடங்கள் ஆன வீட்டிற்கே இந்த கதியென்றால், பல நுாற்றாண்டுகளாக பாழ்பட்ட கிடந்த ஒரு பரந்த கோவிலின் கதி எப்படியிருந்திருக்கும்..! ஏதோவொரு துர்சக்தி இத்தனை வருடங்களாகக் கோவிலினை எழுப்பவிடாமல் தடுத்து வருகின்றதே..! 1498ம் ஆண்டிற்கு பின் அவ்வளவாக ஒன்றும் படையெடுப்பு, கலவரம் என்று ஒன்றுமேயில்லையே..! மன்னராட்சி ஒழிந்தது ஆங்கிலேய அரசு ஊடுருவிய பின்னர்தானே..! ஒரு மன்னர் கூடவா முன்வரவில்லை கோவிலை சீர்செய்வதற்கு..? என்னவாகயிருக்கும்..? என் மனதில் படுவதைச் சொல்கிறேன்..! இந்த கோவிலை பாழ்படுத்தியவர்கள் துர்சக்திகளை ஏவிவிடுவதில் சிறந்த வல்லுனராயிருந்திருப்பார்கள்..! கோவிலை பாழ்படுத்தியபின் இந்த துர்சக்திகளை பலமாக ஸ்தாபித்தோ, ஏவிவிட்டோ சென்றிருப்பார்கள். இல்லாவிடின் இவ்வளவு காலமாக பாழ்பட்டு கிடந்திருக்காது...!



எல்லாவற்றிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு காலம் உண்டு. அளவு உண்டு. நம் ஆயுள் கூட நாம் விடும் மூச்சுக் கணக்குதான் என்பார்கள். அதுபோன்று ஆதிநாயகனும் இவ்வளவு காலம் ஏதோவொரு காரணத்தினால் கட்டுண்டு கிடந்தார்..! ஏதேனும் ஒரு மஹானின் பொன்னடிகள் இங்கு பட்டிருக்கவேண்டும். அவரது வருகைக் கண்டு இந்த துர்சக்திகளின் பலம் குன்றியிருக்கவேண்டும். அரங்கன் எங்களை இங்கு அனுப்பி பணிகொள்ளச் செய்திருக்க வேண்டும்..!









-தொடரும்..!

No comments: