Friday, December 3, 2010

கோபுரப்பட்டி வளர்ந்த கதை - வளர்ச்சி-11 3.12.2010

அரங்கனது சங்கல்ப்பம் இன்றி இந்த ஒரு மகத்தான கைங்கர்யம் எங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எனவேதான் இவ்வளவு வருடங்களாகியும் சீரமைக்க முடியாத ஒரு கோவில் எங்களைப் பிரி்த்து பழுதுபார்ப்பதற்கு ஒரு வாய்ப்பளித்தது. இந்த வாய்ப்பினை நம் சக்திக்கு முடிந்தவரை பயன்படுத்துவோம் என்று நானும் ஆடிட்டரும் ஒருமித்த சங்கல்ப்பத்துடன் செயல்பட ஆரம்பித்தோம். நம் மனதில் அந்தர்யாமியாய் வீற்றிருக்கும் அரங்கன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான். அந்த: ப்ரவிஷ்ய பகவந்தகிலஸ்ய ஜந்தோ: ஆஸே துஷஸ் தவ கரீச ப்ருசம் தவீயாந் | ஸத்யம் பவேயமதுநாபி ஸ ஏவ பூய: ஸ்வாபாவிகீ தவ தயா யதி நாந்தராய: || -(ஸ்வாமி தேசிகரின் ஸ்ரீவரதராஜ பஞ்சாசத்-(33)- அத்திகிரி பெருமாளே! நீ எல்லாப் பிராணிகளிடத்தும் உட்புகுந்து அந்தர்யாமியாய் அவற்றின் அருகிலேயே இருக்கின்றாய். ஆயினும் உன்னுடைய குணங்களையும் பெருமையையும் அறியாத அடியேன் நீ அருகில் இருப்பதை அறியாதவனாய் நெடுந்தூரத்திலேயே விலகியிருந்தேன். இப்பொழுது உனது இயற்கைக் கருணையினால் உன்னை அறிந்து அடியவனாகிவிட்டேன். இப்படி உன் கருணை என் அறியாமைக்கு எதிராய் செயல்பட்டு, விலகிச் செல்லும் என்னைத் தடுக்காவிட்டால் என் கதி என்னவாயிருக்கும்..? உனக்கு மிகவும் தூரத்திலேயே இருந்திருப்பேன்..! அரங்கன் அந்தர்யாமியாய் இருக்கின்றான்..! அவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்..! இயங்க வைக்கும் சக்தி அவன்..! இயங்கும் இயந்திரமே நாம்..! இந்த ஒரு நினைவே நமக்கு ஒரு மிகப் பெரிய ரக்ஷை. நாம்தான் செய்கின்றோம்..! நம்மால்தான் இந்த காரியம் ஆயிற்று என்று கர்வப்பட்டு கொள்வோமானால் உறுதியாய் பங்கப்படுவோம். அழிவோம் அல்லது அழிவிற்கு நிகரான மானபங்கம் ஏற்படும். இதிகாசங்கள் ஆகட்டும், வரலாறு ஆகட்டும், அரசியல் ஆகட்டும் கர்வபட்டவர்கள் அனைவருமே பங்கப்பட்டிருக்கின்றனர். இதுதான் நியதி..! கோவிலின் ஈசான்ய மூலையின் மீது அதிககவனம் எடுத்துக்கொள்ளபட்டு சுத்தமாக சீரமைக்கப்பட்ட்து. கிணறு தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு அதற்கு சுற்றுப்புற சுவர்கள் அமைக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள் அனைவருக்கும் ஏதும் சர்ப்பம் தென்பட்டால் எக்காரணம் கொண்டும் கொன்று வீடாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. (கோவில் காரியங்கள் முடியும் வரை எவருக்கும் சர்ப்பங்கள் ஏதும் தென்படவேயில்லை. திரு ஜோதிகுமார் என்ற மின்சார தொழிலாளி மட்டும், கோவிலுக்கு வரும்போது, சுமார் 20அடி நீளமுள்ள ஒரு சர்ப்பத்தினைப் பார்தது அதிர்ந்து போனார். அது இவருக்கு எந்தவொரு பயத்தினையும் அளிக்காமல் சென்று விட்டதாகக் கூறினார்). தீய ஆவிகள் - இருக்கலாம். உறுதியாக ஏதும் சொல்ல முடியவில்லை. என்றாலும் திரு.சுந்தரேசன் மற்றும் திரு.முரளீ ஆகிய இருவர் மின்சாரப் பணி செய்யும் போது ஓரிடத்தில் ஓர் ஆவி உருவத்தினைக் கண்டதாகக் கூறினார்கள். எப்படியிருந்தாலும் சூரியன் உதித்தால் இருள் மறையத்தானேச் செய்யும். பெருமாளும், தாயாரும், பரிவாரங்களும் கூடிய விரைவில் அமர்ந்து மணக்கச் செய்யப்போகின்றார்கள் அப்போது இவைகள் விரட்டப்படும் என்று உணர்ந்தோம். சிறுவன் முன்னெச்சரிக்கையாகக் கூறியதும் அவனருள்தான். ஒரளவுக்கு அவன் எச்சரிக்கைச் செய்ததற்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு திருப்தியடைந்தோம். சரி..! இனி கோவில் பணி குறித்துக் காண்போம்..! ஒருவழியாக மூலவர், ஆதிசேஷன் ஆகிய இருவருக்கும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து விட்டோம். உற்சவ மூர்த்தங்களுக்கு என்ன செய்வோ்ம்..? அரங்கா..! நீ யாரை இதற்கெனக் காட்டியருளப் போகின்றாய்..? -தொடரும்..!

No comments: