Tuesday, January 4, 2011

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! வளர்ச்சி-12 4.1.2011

உற்சவ விக்ரஹங்கள் என்றவுடனே எனக்கு எப்போதும் நினைவிற்கு வருபவர்
சிவஸ்ரீ. ஸ்ரீதரன் அவர்கள்தாம். சைவ சித்தாந்தம் நன்கறிந்தவர். எங்கள் கோவிலின் யானைப்பாகர். அரங்கனிடத்து அலாதிப் பிரியம் கொண்டவர். அகிலாண்டேஸ்வரியின் உற்சவ மூர்த்தம் அளித்தவர். சிற்பங்களின் நுணுக்கங்கள் தெரிந்தவர். “ஸ்ரீரங்கம் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் திருக்கூட்டம்” என்னும் அமைப்பின் ஸ்தாபகர். அவருக்கு சுவாமிமலையில் திரு.இராமகிருஷ்ணன் என்னும் சிற்பங்கள் வார்ப்பவர்தாம் எப்போதும் விக்ரஹங்கள் செய்து தருபவர். இவர் “ஸ்ரீசரஸ்வதி ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ்” எனும் தொழிற்கூடத்தினை நடத்திவருகின்றார். சிவஸ்ரீ ஸ்ரீதரனும் அவரது திருக்கூட்டத்தினைச் சார்ந்த அன்பர்களும், மற்றும் வடக்குச்சித்திரைவீதியிலுள்ள “ஸ்ரீ எதிராஜர் டிரஸ்ட்“ என்னும் அமைப்பினர்களும் சேர்ந்து பெருமாளுக்கு உற்சவர், தாயார் உற்சவர், ஸ்ரீதேவி பூமிதேவி உற்சவ மூர்த்தங்களைச் செய்து தர இசைந்து அதன்படியே மிகச் சிறப்பாக செய்து கொடுத்தனர். கிராமத்திலுள்ள கோவில். ஒரேயொரு பட்டர்தாம் பூஜைகள் செய்யப் போகின்றார். ஆகவே அவர் எளிதில் தனியொரு ஆளாக எழுந்தருளபண்ணுவதற்குத் தோதாக உற்சவ விக்ரஹங்கள் அதிக எடையுள்ளதாக அமையக்கூடாது என்பதில் மிகவும் கருத்தாகயிருந்து குறைந்த எடை கொண்டதாகவும், அருமையான நேர்த்தியுடனும் உற்சவவிக்ரஹங்கள் வார்க்கப்பட்டன.



கையிலுள்ள பணம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது. ஆடிட்டர் திரு.இராமச்சந்திரன் மிகவும் சிக்கனமாக செலவு செய்தும் கற்கள் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது. அவரின் சிந்தனையில் அரங்கன் அவ்வப்போது மகத்தான சில யோசனைகளைச் செய்ய வைப்பான். கற்கள் வாங்கவேண்டிய சூழ்நிலையில் கோவிலின் மதிற்சுவர்கள் ஆடிட்டரின் கவனத்தினை ஈர்த்தது. மதிற் நான்கு அடி அகலம் கொண்டதாக அமைந்திருந்தது. பாழடைந்தும் கிடந்தது. பணியாளர்களில் ஒரு சாரர்களை மதிலைப் பிரிப்பதற்கு நியமித்தார். மதிற்சுவர்கள் பிரிக்கப்பட்டு தரமான கற்கள் மண்டபத்திற்கென பயன்படுத்தப்பட்டன. மண்டபமே் வளர்ந்து கொண்டிருந்தது. கோவில் முன்னால் இருந்த அமைப்பினை விட மூன்றடி உயரத்தில் எழும்பிக்கொண்டிருந்தது.



தாயார் ஸந்நிதி..? ஸ்ரீரங்கம் போன்று தனியாக வாயுமூலையில் (வடமேற்கு மூலை) அமைப்பது என தீர்மானம் செய்தோம்..!



அமைக்கலாம்..! ஆனால் அதற்கான செலவிற்குப் பணம்...? யாரேனும் முன்வருவார்களா..? எங்கள் சுமையினை பகிர்ந்து கொள்வார்களா...? கோவில் அமைத்தாக வேண்டும். தாயார் மூலவர் சிலை வடித்தாக வேண்டும்..! ஏறத்தாழ இவையனைத்தும் செய்வதற்கு சுமார் 5 லட்சத்திற்கும் மேல் ஆகுமே..! எங்கு செல்வது..? யாரைக் காண்பது...?









-தொடரும்..!

No comments: